"எங்கள் விளைநிலங்களைக் கையகப்படுத்த வேண்டாம்" தமிழக அரசுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை !
Announcement posted by Catalyst PR 09 Mar 2026
சென்னை, மார்ச் 9, 2026
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 'நமது நிலம் நமதே விவசாயிகள் நலச் சங்கத்தைச்' சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், விளைநிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும், அவற்றை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதால் ஏற்படும் கடுமையான விளைவுகள் குறித்துக் கவனத்தை ஈர்க்கவும், சென்னையில் உள்ள முக்கிய அரசியல் கட்சி அலுவலகங்களில் மனு அளிக்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர்.
ஓசூர் பசுமைவெளி பன்னாட்டு விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைப்பதற்காக வளமான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டு வருவாய் கிராம விவசாயிகள் கடும் கவலை தெரிவித்தனர்.
ஓசூர் பகுதியில் சுமார் 39,000 ஏக்கர் வளமான விளைநிலங்கள் - பெரிய உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்களுக்காக மாநில அரசு கையகப்படுத்தப்பட உள்ளதாகல், இந்த நடவடிக்கை வாழ்வாதாரத்திற்காக அந்த நிலங்களைச் சார்ந்திருக்கும் சுமார் 50,000 விவசாயக் குடும்பங்களைப் பாதிக்கக்கூடும்.
இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. குமார ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓசூர் பசுமைவெளி விமான நிலையத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நிலக் கையகப்படுத்துதல் நடவடிக்கையானது முதலி, பலவனப்பள்ளி, பெத்தமுதலி, அதவனப்பள்ளி உள்ளிட்ட பல வருவாய் கிராமங்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்தில் உள்ள தசப்பலேநத்தம் (தசப்பள்ளி), கருப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, வெங்கடேசபுரம், மிடுதேப்பள்ளி, முதலி, ஆட்டூர் மற்றும் ஆலநத்தம் ஆகிய கிராமங்களும், அதனைச் சுற்றியுள்ள சில வருவாய் கிராமம் அல்லாத குக்கிராமங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும். இந்த வளமான விளைநிலங்கள், பல தலைமுறைகளாக எங்களைப் போன்ற விவசாயக் குடும்பங்களைக் காத்து வருவதுடன், விவசாயமே எங்களது வருமானத்திற்கான ஒரே ஆதாரமாகவும் விளங்குகிறது.
எங்களது முழு ஒத்துழைப்பை அரசுக்கு வழங்குகின்ற அதே வேளையில், சர்வதேச விமான நிலையம், அறிவுசார் வழித்தடம் மற்றும் விவசாயத்துடன் நேரடித் தொடர்பில்லாத சிப்காட் (SIPCOT), சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) உள்ளிட்ட பெரிய அளவிலான தொழில் திட்டங்களிலிருந்து இந்த வளமான விளைநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென அரசுக்குத் தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எங்களின் உயிரே போனாலும் பரவாயில்லை... ஆனால், விளைநிலங்களை மட்டும் விட்டுத் தர மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியுடன், ஒற்றுமையாக இருக்கிறோம்.
கிராமப்புறச் சமூகங்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட ஒரு அரசு, வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சமநிலையான மற்றும் தீர்க்கமான முடிவை மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" என்றார்.
இவருடன் இணைந்து இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் திரு. நாகராஜூ கவுடா, திரு. வி. நாராயணசாமி, திரு. துர்கா பிரகாஷ் மற்றும் திரு. முருகன் உள்ளிட்ட பலரும் இன்று (9 மார்ச்):சென்னை வந்திருந்தனர்.
Media contact : Mr Nagaraju, Member, Namadhu Nilam Namadhe Farmers' Welfare Assn, +919945569336